பிரதமர் மோடி கடந்தமுறை வந்த போது கோ பேக் என பலுான் பறக்க விட்டவர்கள். இப்போது பறக்க விட முடியுமா ? என்று மதுரையில் பாஜக சார்பில் நடந்த விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் ராதாரவி. அவர் எந்த கட்சியில் இருந்தாலும் சர்ச்சை பேச்சுகளுக்கு மட்டும் பஞ்சம் வைப்பதே இல்லை. திரைப்பட விழா ஒன்றில், நயன்தாராவை பற்றி ஆபாசமாக பேசியதால், திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.பிறகு பாஜகவில் சேர்ந்தார். வழக்கம் போல அங்கேயும் அடிக்கடி ‘சர்ச்சை’ ஆன பஞ்சாயத்துகளில் மாட்டிக்கொள்கிறார்.தற்போது வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் நடிகர் ராதாரவி.
மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநில செயற்குழு உறுப்பினர் நடிகர் ராதாரவி, பிறகு பேசினார். அப்போது பேசிய அவர், ‘தற்போது பாஜக கட்சிக்கு தமிழகத்தில் நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அடுத்த ஆட்சியில் 80 எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டியதில்லை. வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தாலே போதும்.
பாஜக கேட்டு தான் அப்போது ஆட்சி நடக்கும். தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வோம் என கூறியவர் தான், தற்போதைய முதல்வர் ஸ்டாலின். தற்போது அவரை அருகில் வைத்துள்ளீர்கள். மாநில அரசு மத்திய அரசை நோக்கி கையேந்தி தான் ஆக வேண்டும். பிரதமர் மோடி கடந்தமுறை வந்த போது கோ பேக் என பலுான் பறக்க விட்டவர்கள், ஜனவரி 12 அன்று தமிழகத்துக்கு பிரதமர் வரும் போது, கருப்பு பலூன் பறக்க விடுவார்களா’ என்று கடுமையாக பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி.