
தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி விசிகவுக்கு பெறப்படுமா என்பது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் 2 வார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தாம்பரத்தில் உள்ள கடப்பேரியில் உள்ள 52 வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பூவிழி என்பவர் போட்டியிடுகிறார். இன்று 70 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தாம்பரத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்டணியே பெரும் வெற்றி பெறும்.
மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும். இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தமிழக முதல்வரின் சிறந்த ஆட்சித்திறன் ஒரு காரணம். மற்றொன்று, திமுக கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுதான். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுகவினர் எதுவும் செய்யவில்லை என்று அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்கள்தான் ஆகின்றன. இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார். அதனால், அதிமுகவின் இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் எதுவும் எடுபடாது.
சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து போட்டியிட்டு திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ அதேபோவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவோம். சென்னை மாநகராட்சியைப் போல தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு தாம்பரம் மேயர் பதவி கேட்பதா என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் பேசி முடிவு செய்யப்படும்” என்று திருமாவளவன் தெரிவித்தார். ந்கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உடன்பாடு தொடர்பாக ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசிய பிறகு, திமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.