
யாராக இருந்தாலும் ஊடகத்தினரை நாகரிகத்தோடு பேசவேண்டும் என்றும், அண்ணாமலை இன்னும் போலீஸ் மனநிலையிலேயே இருக்கிறார் அவர் தனது போலீஸ் தொப்பியை கழட்டி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் கொலைகள் சென்னையில் அதிகமாக நடந்து வரும் நிலையில் காவல்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் அந்த வரிசையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் ஆளுநர் மாளிகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாமக தலைவராக பொறுப்பேற்ற நிலையில் ஆளுனரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவருடனான சந்திப்பில் பல்வேறு விஷயங்களை உரையாடினேன், நீட் தேர்வு குறித்து பேசினேன், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், விவசாயம், காலநிலை மற்றும் நீர் மேலாண்மை, போதைப்பழக்கம், ஆன்லைன் ரம்மி போன்றவற்றை ஆளுநருக்கு எடுத்துக் கூறினேன்.
தமிழகத்தில் மதுவிலக்கு தேவை என்பதே பாமகவின் கொள்கை, அதேநேரத்தில் காலநிலை மாற்றம் குறித்து திட்டமிட்டு இப்போது அதற்கு நிதி அளிப்பது குறித்தும் பேசினேன், ஆன்லைன் ரம்மி குறித்து நான் கூறியதை கேட்டு இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியமாக கேட்டுக்கொண்டார். நீட் குறித்து கூறினேன் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது அப்போதைய மத்திய அரசை நீட்டி அமல்படுத்த விடாமல் தடுத்தேன் என்பதையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன், நீட் காரணமாக தமிழகத்தில் 50, 60 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதையும் எடுத்துக் கூறினேன், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை பிற மாநிலங்களில் திணிக்கக்கூடாது, தமிழகத்துக்கு இருமொழிக் கொள்கையை இருக்க வேண்டும், கட்டப்பஞ்சாயத்து ரியல் எஸ்டேட் கொலைகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவில் நடந்து வருகிறது.
காவல்துறை அதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார். அப்போது ஊடகவியலாளர்கள் குறித்து அண்ணாமலை பேச்சு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, அண்ணாமலை இன்னும் போலீஸ் மனநிலையிலேயே இருக்கிறார், அண்ணாமலை போலீஸ் தொப்பியை கழட்டி வைக்க வேண்டும், ஊடகம் இன்றி முன்னேற்றம் இல்லை, உயிரை பணையம் வைத்து அரசுக்கும் மக்களுக்கும் ஊடகவியலாளர்கள் பணி செய்கின்றனர். அரசியலில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ஊடகவியலாளர்கள் குறித்து நாகரிகத்தோடு பேசவேண்டும் என்றார். அன்புமணியில் இந்த கருத்து பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.