அதென்ன ஆயுஷ்..? யாரை வெளியே போகச் சொல்கிறீர்..? ஆயுஷ் செயலாளரை வண்டவாளம் ஏற்றிய வேல்முருகன்..!

By Asianet TamilFirst Published Aug 23, 2020, 8:39 PM IST
Highlights

ஆயுஷ் செயலாளர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, ஹிந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் டி. வேல்முருகன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் தேசிய யோகா நேச்சுரோபதி மருத்துவர்களின் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. மூன்று நாள் கருத்தரங்கு அது. அதில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே தன் உரையை ஹிந்தியில்தான் ஆற்றினார். அவரது இந்தி உரை புரியாத, தமிழ்நாட்டைச் சேர்ந்த யோகா மருத்துவர்கள், “ஐயா, பயிற்சி அளிப்பவர்கள் மூன்று நாட்களாக ஹிந்தியியில்தான் பேசுகிறார்கள். அது எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் எங்கள் மாநிலத்தில் பணி செய்யத் தேந்தெடுக்கப்பட்டு இந்தப் பயிற்சிக்காக வந்தவர்கள். பல மாநிலத்தவர் இருக்கிறோம். தாங்கள் ஆங்கிலத்தில் பேசினால் எங்களுக்கு நன்கு புரியுமே?” எனக் கேட்டிருக்கின்றனர்.


உடனே ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கோட்சே, “ஹிந்தியில்தான் பேசமுடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ” என்று என அதட்டியிருக்கிறார். இது ஹிந்தி பேசாத மருத்துவர்கள், குறிப்பாக தென்னக மருத்துவர்கள், அதிலும் குறிப்பாக தமிழக மருத்துவர்கள் மீதான “ஹிந்தி”யர்களின் இயல்பான வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடு அன்றி வேறல்ல. இது தவிர தமிழர்களுக்கு எதிரான வேறு விதமான வேண்டாத நடவடிக்கைகளும் அந்த ஆயுஷ் அமைச்சகத்தில் அரங்கேறுகின்றன. அதாவது, ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரே ஒரு சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியையும் இப்போது எடுத்துவிட்டார்கள்.
முந்தா நாள் அன்று (21.08.2020) சித்த மருந்துக் கட்டுப்பாடு இணை இயக்குநர் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவரை நியமித்திருக்கிறார்கள். அந்தப் பதவிக்கு எம்டி (சித்தா குணபாடம்) படித்த மருத்துவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்கிறது நியமன விதிமுறை. ஆனால் விதியை மீறி ஆயுர்வேத மருத்துவரை நியமித்துள்ளார்கள். இந்தப் பதவி (பொறுப்பு) என்பது, இந்திய அளவிலான இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் பதவியாகும். தமிழ்நாட்டில் இரு அரசுக் கல்லூரிகளிலும் தேசிய நிறுவனத்திலும் எம்டி குணபாடம் பயின்ற அனுபவம் வாய்ந்த எத்தனையோ சித்த மருத்துவர்கள் இருக்கும்போது; தான்தோன்றித்தனமாக, சர்வாதிகாரமாக, முறைகேடாக, தமிழ் சித்த வைத்தியத்தின் மீதான கொடும் வெறுப்பின் காரணமாக இப்படி தகாத முடிவை எடுக்கிறார்கள்.


கடந்த 10 ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் Ayurveda Siddha Unani Drug Technical Advisory Board (ASUDTAB), மரபார்ந்த தமிழ்ச் சித்த மருத்துவ மூல நூல்களான 75 நூல்களை, அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்கப் போராடி வருகிறது. ஆனால் இன்றுவரை அது ஏற்கப்படவில்லை. அப்படி தமிழ்ச் சித்த மரபு நூல்களை இணைக்கும்போது, அந்நூல்களில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சித்த மருந்துகள் ஆய்வுகளுக்கும், விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கும் வரும். ஆனால் இதை இணைக்க வேண்டி எப்போது கோரிக்கை வைத்தாலும், சாக்குப்போக்குகளைச் சொல்லி தட்டிக்கழிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆயுஷ் அமைச்சகம்.
இப்படிப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்துக்கு நேராக, தமிழக மக்கள் சார்பில் பல கேள்விகளைக் கேட்க வேண்டியதிருப்பினும், தற்போது ஒருசில கேள்விகளையே இங்கு முன்வைக்கிறோம்: இந்த ஆயுஷ் என்பது எந்த மொழி? உயிரோடிருக்கும் எந்த மொழியிலும் இச்சொல் இல்லையே! A ஆயிர்வேதத்தையும், U யுனானியையும் S சித்தாவையும் H ஹோமியோபதியையும் குறிக்கும் என்றாலும், இது என்றைக்குமே இருந்திராத சமஸ்கிருத மொழியை அடியொற்றிய ஒரு சொல் என்றுதான் சொல்கிறார்கள் மொழியியலாளர்கள். அப்படியிருக்க நலவாழ்வு அமைச்சகத்துக்கு ஆயுஷ் என்று மக்களுக்கே புரியாக பெயரை வைப்பதென்ன? அன்றியும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் இல்லாத இந்த சமஸ்கிருதமும் இடம்பெற்றிருப்பதென்ன? அதை அகற்ற வேண்டாமா? உடனே அகற்று என்று இந்திய மக்களாகிய நாங்கள் கட்டளையிடுகிறோம்.
“ஹிந்தியில்தான் பேசமுடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ” என்று சொல்ல இந்த ராஜேஷ் கோட்சே யார்? ஹிந்தி நாட்டவரான இவரல்லவா இந்தியாவை விட்டு எழுந்து போயிருக்க வேண்டும்!இப்படி நாம் சொல்வது கூட அவருக்குப் புரியாது. ஏனென்றால் மோடியால் நியமிக்கப்பட்ட சக குஜராத்தியர் அல்லவா அவர்! அதனால்தான் தாய்மொழியான குஜராத்தியிலும் பேசாமல், ஆங்கிலத்திலும் பேசாமல் ஹிந்தியில்தான் பேசுகிறார்; அதாவது இந்திக்கு வால்பிடிக்கிறார். அரசியலிலும் ஆங்கிலத்திலுமாக இரு பல்கலைக்கழக பட்டங்களை வாங்கியிருப்பதாகச் சொல்லும் மோடிக்கு தொடர்பு மொழி - உலக மொழியான ஆங்கிலத்தில் பேசுவதற்கு என்ன கேடு? அவருக்குத்தான் வெளிச்சம்.
மோடியின் இத்தகைய புத்தியை - உத்தியைத்தான் கையாண்டிருக்கிறார் ராஜேஷ் கோட்சே! கோட்சே என்றதும் இந்தியாவை மீட்டுத் தந்த தேசத் தந்தை காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சேதான் நினைவுக்கு வருகிறார். இந்த ராஜேஷ் கோட்சே காந்தியார் மீட்டுத் தந்த இந்தியாவையே கொன்றுவிடுவார் போலல்லவா பேசியிருக்கிறார். இந்தியா என்பது மாநிலங்களின் (நாடுகளின்) ஒன்றியம். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு தேசிய இனமாகும். அதற்கான நாடும் தனியாகும். அத்தனை நாடுகளும் இணைந்துதான் இந்திய ஒன்றியம். சுருக்கமாக இந்தியா என்கிறோம். அதனால்தான் சொல்லுகிறோம் ராஜேஷ் கோட்சேவின் பேச்சு உதவாத பேச்சு, வேண்டாத பேச்சு, ஆபத்தான பேச்சு. அவரை மட்டுமல்ல, ஆயுஷ் என்ற பெயரையும் மாற்ற வேண்டும்; அந்த அமைச்சகத்தின் தவறான நடவடிக்கைகளையும் போக்குகளையும் முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். இது பிரதமர் மோடியின் முழுமுதற் கடமையாகும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் தன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்), திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய (ஐன்ஸ்டீனின் பொது சார்பியல்படி) அறிவியல் தளங்களைக் கொண்டது தமிழ்நாடாகும். இதெல்லாம் பிற்போக்கு வர்ணாசிரம சனாதன மோடிக்கோ, அவரது பிடியாள் ராஜேஷ் கோட்சேவுக்கோ புரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் வேறு வழியில்லை; அந்த வாய்ப்பை அவர்கள் உருவாக்கிக் கொண்டுதான் தீரவேண்டும்; அதன்படி நடந்தாகவும் வேண்டும். இல்லையென்றால் இந்த அறிவியல் உலகில் மோடியின் பிற்போக்கு வர்ணாசிரம சனாதனம் அப்படியே கடாசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
உலக நாடுகள் சங்கத்தின் (Leauge of Nations) ‘ஒரு மொழி ஒரு நாடு’ என்ற நியதிப்படி, ஆயுஷ் செயலர், ஹிந்தி பேசும் ஒரு தனி நாட்டவரே! அவர் நாடு மாறி, பல்வேறு மொழி இனத் தேசிய ஒன்றியமான இந்தியாவிற்குள் வந்து, இந்தியர்களைப் பார்த்தே, ஹிந்தி தெரியாதவர் வெளியேறுங்கள் என அதட்டுவதா?'' என்று அறிக்கையில் வேல்முருகன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
 

click me!