தலைமை செயலாளர் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையேல் நாடாளுமன்றம் மூலம் நடவடிக்கை.. கொந்தளிக்கும் டி.ஆர்.பாலு!

By Asianet TamilFirst Published May 14, 2020, 8:38 PM IST
Highlights

நாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக் குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது, குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு  ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் பற்றி விளக்கினோம். 

தலைமை செயலாளர் சண்முகம் தனது செயலுக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை 5 மணியளவில் திமுக மக்களவை எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்தோம். அதாவது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் கொரோனா நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்துள்ளனர். இதனை அரசிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தித்தோம்.
நாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக் குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது, குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு  ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் பற்றி விளக்கினோம். இதன் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்த விவரத்தை தெரிவித்தோம். அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
ஆனால், தலைமை செயலாளர் சண்முகம் உரிய கவனம் செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மேலும், கலாநிதி வீராசாமி வேண்டுகோளின் படி தொலைக்காட்சியின் இரைச்சல் ஒலியை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்துவிட்டார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம் பற்றி கேட்டோம். அதற்கு எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என்றார்.


மேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக “This is the problem with you people” என்று பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தயவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு “என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க்க போகிறீர்களா? அவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று இறுமாப்புடன் கூறினார். எங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதோடு வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமை செயலாளர் சண்முகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தனது செயலுக்கு உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்னையை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமை செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


எடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக, ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை போன்று அமைந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஜனநாயக கட்டமைப்பை கண்ணியம் காத்திடும் முறையில் பணியாற்றினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது” என அறிக்கையில் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

click me!