குடும்பத்திற்குள் குஸ்தியை மூட்டிய ஒன்றிணைவோம் வா... ஓ.கே. ஆகாத பி.கே.ப்ளான்.. கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்

By Thiraviaraj RMFirst Published May 14, 2020, 6:47 PM IST
Highlights

திமுக சீனியர்கள் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அதன்பிறகே அவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தை பாதியில் கைவிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 

’’ஒன்றிணைவோம் வா ஒன்றிணைவோமா என்று காத்திருக்கிறேன். ஒன்றிணைவோம் வா... என்ற 90730 90730 எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எங்கள் பஞ்சாயத்தில் 200க்கும் மேற்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும், ஜாதி ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் கொரானா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று மே 1 ஆம் தேதி தொலைபேசி மூலம் பதிவு செய்திருந்தேன்.

பதிவு செய்ததில் இருந்து 13 நாட்கள் கடந்து ஓடி விட்டன. ஸ்டாலின் அவர்களின் உரையாடல் பதிவு மூன்று முறை அலைபேசியின் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. நிச்சயம் ஒரு வார காலத்துக்குள் எங்கள் பஞ்சாயத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்டகுடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்..’’என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து விட்டு உதவி கிடைக்குமா எனக் காத்திருக்கிறார்.  இவர் மட்டுமல்ல... தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் ’ஒன்றிணையக் காத்திருக்க யாருக்கும் உதவி கிடைக்கவில்லை.

 

மாறாக இந்த விவகாரம் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே மனஸ்தாபங்களை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் வழங்க திமுக தொடங்கிய ஒன்றிணைவோம் வா அமைப்பில் உதவி கேட்டு 90730 90730 என்ற எண்ணிற்கு நாளொன்றுக்கு வரும் 7000 அழைப்புகளில் 2000 அழைப்புகளை மட்டுமே பதில் கொடுக்கப்படுகிறது. ஒன்றிணைவோம் வா தொடங்கப்பட்ட நாளில் இருந்து வந்த அழைப்புகள் 1 லட்சத்து 70 ஆயிரம் கால்கள். அதில் 50 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே உதவியும், உதவுவதாக திமுக சார்பில் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் உதவி கேட்டவர்களில் கால்வாசி பேருக்கு கூட நிவாரணம் சென்றடையாததாலும், திமுக சார்பில் ரெஸ்பான்ஸ் இல்லாததாலும் அழைத்த மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த திட்டத்தை ஆரம்பித்ததே திமுகவுக்கு பின்னடைவுதான் என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். இதனால் மூன்று மாதங்கள் நடத்த இருந்த இந்தத் திட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அப்படி பாதியில் விட்டால் மற்ற கட்சிகள் ஏளனம் செய்து விடும். அப்படியே தொடரட்டும் என்கிறாராம் ஸ்டாலின் மருமகன் சபரீசன். ஸ்டாலின் எவ்வளவோ எடுத்துரைத்தும் சபரீசன் விடாப்படியாக இருப்பதால் மாமனாருக்கு மருமகன் மீது வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இருவருக்கும் இடையிலான இப்படி ஒரு போர்க்குரலுக்கு காரணம் பிரசாந்த் கிஷோர் எனக்கூறப்படுகிறது. ஒன்றிணைவோம் வா திட்டத்தை ஐபேக் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்க தி.மு.கவின் அமைப்புரீதியான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆங்கிலம் தெரிந்த வடமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க  தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு ஐபேக் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்ட செயலாளர்கள் விரும்பவில்லை. 

இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐபேக் நிறுவனத்தினருக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் பனிப்போர் மூண்டுள்ளது. இதனை மு.க.ஸ்டாலினிடம் பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் புகாராக கூறியுள்ளனர். ஒரு மண்டலத்துக்கு 39 தொகுதிகள்வீதம், தி.மு.க-வை ஆறு மண்டலங்களாக ஐபேக் டீம் பிரித்துள்ளது. ஐபேக் டீம் பணிகளை மேற்பார்வையிட்டு தினமும் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் செய்வது மண்டலப் பொறுப்பாளர்களின் பணி. தொகுதிவாரியாக மக்களின் பல்ஸை அறியவும் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒரு தொகுதிக்கு மூன்று பேர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில், ஐபேக் டீமைச் சேர்ந்த வடமாநில இளைஞர்களும் அடக்கம். ஒன்றிணைவோம் வா குழுவுக்கும் தொகுதி குழுவுக்கும் தேவைப்படும் உதவியைச் செய்வதுடன், மாவட்டச் செயலாளரின் பணி நின்றுவிடுகிறது. நீக்கம், நியமனம் எல்லாம் ஐபேக் சொல்படிதான் கட்சிக்குள் நடக்கின்றன. மாவட்டச் செயலாளர்களுக்கு இருந்த அதிகாரத்தை அபகரித்துக் கொண்டது ஐபேக் நிறுவனம். 

அதேவேளை திமுக கூறிய பல காரியங்களை செய்ய முடியாமல் திணறி வருகிறது ஐபேக் டீம். அதாவது திமுக ஐடி விங் பிரிவால் சாதிக்க முடிந்ததை கூட ஐபேக் டீமால் சாதிக்கவும் சமாளிக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் திமுக சீனியர்கள் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அதன்பிறகே அவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தை பாதியில் கைவிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சபரீசன் தான் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட பிரயத்தனப்பட்டார். ஆகையால் பி.கே. போடும் திட்டங்களை பாதியில் நிறுத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போடுவதால் குடும்பத்திற்குள்ளேயே மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக முணுமுணுக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

click me!