
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருகை தர உள்ளதையொட்டி மதுரையில் சாலைகள் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்ட அம்மாநகராட்சி உதவி ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்சி நடக்கிறதா? அல்லது திமுக ஆட்சி நடக்கிறதா? என பலரும் விமர்சித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் நெருக்கடிக்கு இடையில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக்கூடாது திமுக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக பாஜக கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தது. திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் குறிவைத்து பாஜகவின் முக்கிய தலைவர்களான மோடி, அமித் ஷா முதல் அண்ணாமலை, குஷ்பு வரை கடுமையாக விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தனர். இயற்கையாகவே திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ளார்ந்த வெறுப்புணர்வு நீடித்து வருகிறது. இயல்பாகவே காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டி வரும் திமுக மீது பாஜகவின் பகை நீறுபூத்த நெருப்பாக கனன்று வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக பாஜக தலைவர்களான அண்ணாமலை, கரு. நாகராஜன், குஷ்பு போன்றோர் திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் இன்று மதுரை வர உள்ள நிலையில் அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் சத்யசாய் நகரில் சாய்பாபா கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக மோகன் பகவத் தமிழகம் வருகை தருகிறார். முன்னதாக அவர் வருகையை குறிப்பிட்டு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகசுந்தரம், மதுரை விமான நிலையத்திலிருந்து- சத்யசாய் நகர் வரை சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து சாலை சீரமைப்பு பணிகள் தடபுடலாக நடைபெற்றது வந்தது. இதைக் கேள்விப்பட்ட மதுரை (கம்யூனிஸ்ட் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதுமிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா? ஆர்எஸ்எஸ் சங்பரிவார் ஆட்சியா என நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். அதேபோல் பல தரப்பினரும் மதுரை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தங்களது கண்டனக் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் சாலை மற்றும் தெரு விளக்குகளை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை துணை ஆணையரை பணியிலிருந்து விடுவித்து மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள வெங்கடேசன் எம்.பி, இந்த உத்தரவு அனைத்து அரசு நிர்வாகத்திற்கும் சரியான ஒரு செய்தியை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இது குறித்து விளக்கமளித்திருந்த மதுரை மாநகராட்சி, பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும், அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின் படியான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை, வழக்கமாக நிர்வாக நடைமுறைகளின்படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் துணை ஆணையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.