
காவிரி நதிநீர் வழக்கில். உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கு, கர்நாடகா, தமிழகம் இடையேயான பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சீநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் துரைமுருகன் பேசும்போது, அதிமுக அரசின் கையாலாகாதனம் என்றும், இருந்ததையும் தமிழகம் இழந்து நிற்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறும்போது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து தமிழ் வெப்சைட் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவையும் விட குறைவான தண்ணீர் வழங்குவதால் தமிழகத்தில் பாசனப் பகுதிகள் குறையும்.
அதேசமயம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சில வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நதிகளுக்கு எந்தவொரு தனி மாநிலமும் உரிமையைக் கொண்டாட முடியாது எனக் கூறியுள்ளது. இதன் மூலம் காவிரி மட்டுமின்றி, பாலாறு, முல்லை பெரியாறு உட்பட அனைத்து நதிகளையும் தனிப்பட்ட மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அதற்கான முயற்சியை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
இதுபோலவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அந்தந்த மாத அடிப்படையில் தண்ணீர் பகிர்வு நடைபெற வேண்டும். மத்திய அரசு அரசியல் லாப நோக்குடன் செயல்படாமல், இந்த பிரச்சனையில் விவசாயிகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை வரவேற்கிறோம். ஆனால் அது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுப்பதில்லை; அதேபோல் கர்நாடக அரசும் அனுமதிப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீரையாவது கர்நாடக அரசு அளிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் விவசாயிகள் கருத்து கூறி வருகின்றனர்.