
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை அதன் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும்,அதன் மூலம் சன் குழும நிறுவனங்களில் ரூ.743 கோடியை முதலீடாக மொரிஷியஸ் நாட்டின் வழியே பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு போலீசார், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கான குற்றப்பத்திரிகையை சிபிஐ, கடந்த 2014ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல்,அமலாக்கப் பிரிவும் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது.
இதைதொடர்ந்து தயாநிதிமாறன், கலாதிநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி ஆகியோரை இந்த வழக்கில் விடுவித்து நீதிபதி ஓபி ஷைனி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கப்பிரிவு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீடு மனு தாக்கல் செய்தால், இன்று மதியம் 2 மணிக்கு விசாரிப்பதாக கூறியுள்ளது.
இதை தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தவற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.