
எம்.பி., எம்.எல்.ஏக்களின் சொத்து விவரங்களை கண்காணிக்க குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதாரண பொருளாதார பின்னணியை கொண்டவர்கள் கூட(சிலர்) மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து விடுகின்றனர். அந்த சொத்துக்களை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் பெயரிலும் பினாமி சொத்துக்களாகவும் பதுக்குகின்றனர்.
இந்நிலையில், லோக் பிரஹாரி என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ஆரோக்கியமான ஜனநாயகம் தழைப்பதற்கு தேர்தல் நடைமுறைகளில் சில சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. எனவே எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் சொத்துக்கள் அதிகமாகிறதா என்பதை கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
அந்த குழு, அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அவரது மற்றும் குடும்பத்தினரது வருமானத்தை மட்டும் தெரிவித்தால் போதாது. வருவாய்க்கான ஆதாரங்களையும் குறிப்பிட வேண்டும் என நீதிபதி செல்லமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.