
கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்கப்பட்டது ஏன் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்திற்கு வழங்கும் நீரை 192லிருந்து 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இந்நிலையில், நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 10 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.
நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அதில் 14.75 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. அந்த நீரை கர்நாடகாவிற்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூருவின் குடிநீர் தட்டுப்பாடு, ஆலைகளின் நீர் பயன்பாடு ஆகியவற்றிற்காக கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் வழங்குவதாக உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. பெங்களூரு குடிநீர் பயன்பாட்டிற்கு 4.75 டிஎம்சி நீரை வழங்குமாறும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.