இ.எம்.ஐ. சலுகைக்கு வட்டிக்கு வட்டி போடுவதா..? மத்திய அரசை கடுமையாக கண்டித்த உச்ச நீதிமன்றம்..!

By Asianet TamilFirst Published Aug 26, 2020, 9:44 PM IST
Highlights

இ.எம்.ஐ.-யைச் செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்துக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 அன்று நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இதனால், வருமானமின்றி இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான இ.எம்.ஐ.யை திருப்பிச் செலுத்த காலஅவகாசத்தை மே மாதம் வரை ரிசர்வ் வங்கி அறிவித்தது. பின்னர் அந்த கால அவகாசத்தை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் செலுத்தப்படாத வட்டித் தொகையை அசலில் சேர்த்து, அதற்கும் சேர்த்து வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன.
இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் தொழிற் நிறுவனங்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில், வட்டி வசூலிக்கப்படாவிட்டால் வங்கிகளுக்கு 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி வாதாடியது.  இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் கருத்து தெரிவிக்கையில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி பின்னால் ஒளிந்துகொள்கிறது. வட்டிக்கு வட்டி வசூலிப்பது ரிசர்வ் வங்கியின் முடிவு என்று மத்திய அரசு தப்பித்துக் கொள்ள பார்க்கிறது. கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், வணிக ரீதியாக அக்கறை செலுத்தாமல் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கத்தால்தான் இந்தப் பிரச்சனையே ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, மத்திய அரசே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு முடிவு எடுத்து செப்டம்பர் 1-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம். வழக்கையும் ஒத்தி வைத்தது.

click me!