
மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என பெருமிதம் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி தெரிவித்தார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, எல்லாருக்கும் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். மேலும் , "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை"என்ற குறளை மேற்கோள்காட்டி, தங்கள் உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர் என்று பேசினார்.
ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சமூக உண்மையை உணர வேண்டும். உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் எதிர்பார்க்கின்றனர். அது நீதியை கொன்று விடுகிறது. அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணி தான் என்ற போதும், அதை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமை மிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார். விசாரணை என்பது புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை போல விசாரணை இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ளன. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என அவர் உறுதி தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். நீதித்துறை உள்கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் நலனுக்காக பாடுபடுவதற்கு பாராட்டும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்து வருகிறார் என்று தலைமை நீதிபதி பெருமை தெரிவித்தார்.
ஆணும் பெண்ணும் ஓரென கொள்வதால் அறிவில் ஓங்கி தழைக்கும் என்ற பாரதியார் பாடலை மேற்கோள்காட்டி பேசிய அவர், நீதிபதி பதவிக்கு வர ஆண் - பெண், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொலி காட்சி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பது என சக நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.