நேரில் ஆஜராக திமுக டாக்டர் சரவணனுக்கு சம்மன்….. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அதிரடி !!!

First Published Nov 16, 2017, 8:47 AM IST
Highlights
summon to dr.saravanan


முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆணையத்தில் நேரில் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

70 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா  டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஆனால் அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, அறிவித்தார். பின்னர் விசாரணை அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.

கடந்த மாத இறுதியில் விசாரணையை தொடங்கிய அவர், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தகுந்த ஆவணங்களுடன் அளிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்த  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் அடங்கிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரும் படிவத்தில், ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டதில் குளறுபடி நடந்திருக்கிறது என்றும் . ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன என்றும்  குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் மனு அளித்த டாக்டர் சரவணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.

அந்த சம்மனில் வரும்  22–ந் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகி தாங்கள் பிரமாண பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் மூல ஆவணங்களை கொண்டுவந்து இந்த விசாரணை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.

நேரில்  ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே ஆணையம், விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும்  என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

click me!