தவித்த எடப்பாடி... தவிர்த்த ஓ.பி.எஸ்... ஒன்வேயில் சசிகலா... தென்மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Oct 30, 2021, 11:14 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பசும்பொன் செல்வதற்கு பதில், பெரியகுளம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் எனக் கூறுகிறார்கள்.

''தேச விடுதலைக்காக பெரும்படை திரட்டிய தென்னாட்டு சிங்கம், தலைசிறந்த பேச்சாளர்,பக்திமான், தேசியம், தெய்வீகம், வீரம், விவேகம், உண்மை, உறுதி இதனையே தனது கொள்கையாக கொண்டிருந்த தெய்வதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்'' என ட்விட்டர் பக்கத்தில் உருகி இருக்கிறார் முன்னாள் முதல்வரும் பசும்பொன் செல்ல முடியாத நிலைக்கு உருவாக்கப்பட்டவருமான எடப்பாடி பழனிசாமி.

பசும்பொன்னுக்கு நேரடியாக செல்ல இயலாத இயலாமையை அவரது இந்த ட்விட்டர் பதிவில் உணர முடியும். காரணம் அதிமுக வலுவாக இருப்பதற்கு முக்குலத்தோரின் வாக்கு வங்கியும் அதி முக்கியம். பொதுவான தலைவராக தன்னை காட்டிக் கொள்ள எடப்பாடி விரும்பினாலும், அவர் கவுண்டர் சமுதாயத்திற்கான பிரதிநிதிதான் என்பதை கட்டமைக்க தயாராகி வருகிறார் சசிகலா. அதனை உடைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைத்தாலும் அவர் முக்குலத்து மக்களுக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்த திட்டமிட்டு வருகிறார்கள் கட்சியில் அவரது போக்கு, அதிகாரத்தை விரும்பாத அந்த சமூகம் சார்ந்த அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள்.

சசிகலா குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து நிர்வாகக் குழு முடிவு செய்யும் என ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்தது எடப்பாடி பழனிச்சாமியை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

ஓபிஎஸின் கருத்துக்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் பேச்சுக்கு ஆதரவு தரும் வகையில்பேசி வருவது தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து அதன்படி தற்போது தென் மாவட்டங்களில் பயணம் செய்து வருகிறார். 

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அடுத்தது என்ன செய்வது என்ற யோசனையில் எடப்பாடி பழனிச்சாமி குழம்பிப் போயுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சி முதல் பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் வரை தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியில் யார் இருந்தாலும் அந்த முதலமைச்சர், தேவர் குருபூஜை விழாவில் கட்டாயம் கலந்து கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சரும் இன்று நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.

அதிமுக சார்பிலும் கட்சியின் இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. குருபூஜை விழாவை புறக்கணித்தால் நாளை தென்மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று யோசித்த எடப்பாடி பழனிச்சாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சேலத்தில் இருந்து நேற்று முன் தினம் சென்னை வந்தார். 

குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை காரணம் காட்டி அவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்றால் நிச்சயம் சசிகலா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என உளவுத்துறை ரிப்போர்ட்டும் அவரை இந்தப் பயணத்தில் இருந்து பின்வாங்க வைத்தது. 

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தலைமைக்கழக அறிவிப்பின் படி மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் அவர்கள் யாரும் பசும்பொன் செல்லவில்லை. 

இன்னும் சொல்லப்போனால்  முக்குலத்தை சேர்ந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூட அங்கு செல்லவில்லை. சசிகலா ஆதரவாளர்களால் ஏதாவது எதிர்ப்பு ஏற்பட்டல் அது தனக்கு தர்ம சங்கடம் ஆகிவிடும் என்கிற முன்னெச்சரிக்கை காரணமாக இறுதி நேரத்தில் ஓ.பிஎஸும் இந்த விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதனால், தேனியில் தேவர் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செய்ததோடு முடித்துக் கொண்டார்.

குருபூஜை விழாவில் கலந்துகொள்ள நேரும் பட்சத்தில் அங்கு சசிகலாவையும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனையும் ஓ.பி.எஸ் எண்ணத்தில் இல்லாமல் இல்லை. ஆகையால்தான் அவர் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். ஆனால் அதற்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சொல்லும் காரணம் வேறு. ஓ.பி.எஸ் மனைவி மறைந்த 60ம் நாளான இன்றைய தினத்தில் தசமி திதி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற உள்ளதால், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பசும்பொன் செல்வதற்கு பதில், பெரியகுளம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் எனக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ எடப்பாடி மருத்துவக்காரணத்தையும், ஓ.பி.எஸ் மனைவியின் தசமி திதியையும் காரணம் காட்டி தேவர் குருபூஜையை தவிர்த்து விட்டனர். சசிகலா ஷோலோவாக அங்கு ஃபெர்பார்மன்ஸ் காட்டி வருகிறார். 

click me!