கொளத்தூர் விசிட்..! திடீர் பொதுக்குழு..! பதற்றத்தில் மு.க.ஸ்டாலின்..! காரணம் என்ன?

By Selva KathirFirst Published Feb 26, 2021, 11:41 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வெற்றி உறுதி என இருந்த மு.க.ஸ்டாலின் திடீரென பதற்றம் அடைய ஆரம்பித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வெற்றி உறுதி என இருந்த மு.க.ஸ்டாலின் திடீரென பதற்றம் அடைய ஆரம்பித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது தொகுதியான கொளத்தூர் சென்று இருந்தார். அங்கு பேசிய ஸ்டாலின், திமுக வெற்றியை தடுக்க சதி நடைபெறுவதாக கூறியிருந்தார். அதோடு திமுகவின் வெற்றியை தடுக்க ஊடகங்கள் சில முயற்சி செய்து வருவதாகவும் அவர் சொல்லியிருந்தார். இதனை எல்லாம் தடுத்து வெற்றிக்கனியை கலைஞர் சமாதியில் நாம் சமர்பிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு திடீரென திமுக பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு வெகு சில நாட்களே உள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் திமுக தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு பொதுக்குழுவை கூட்டியது இல்லை. ஆனால் திடீரென பொதுக்குழு கூட்டப்படுவதற்கான காரணம் சட்டப்பேரவை தேர்தல் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிலையில் இந்த முறை பொதுக்குழுவை ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றியுள்ளது திமுக. இப்படி கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைமையின் செயல்பாடுகள் அனைத்துமே பதற்றத்தின் வெளிப்பாடாகவே உள்ளது தெரிய வருகிறது. மேலும் காங்கிரஸ் – திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக நிர்வாகிகள் முகம் அவ்வளவு மலர்ச்சியாக இல்லை.

அதே சமயம் திமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மலர்ச்சியுடன் செய்தியாளர்களை சந்தித்தனர். அத்தோடு அண்மையில் சென்னை வந்த பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக சொல்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது தேர்தல் வெற்றி என்பது தற்போதைய சூழலில் மக்களின் வாக்குகளை பெறுவதோடு மட்டும் அல்ல இந்த சிஷ்டத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று சில விஷயங்களை எடுத்துக்கூறியதாக சொல்கிறார்கள். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவை அனுசரித்து செல்லாமல் தற்போதைய சூழலில் எந்த மாநிலத்திலும் வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளதை பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்ததாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் பேசிய பிரதமர் மோடி, திமுக தமிழகம் முழுமைக்குமான கட்சி இல்லை என்று ஒரு போடு போட்டுள்ளார். கடந்த 25 வருடங்களில் ஒரு முறை கூட திமுக முழுப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை என்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விஷயம் தான் திமுக வயிற்றில் புலியை கரைக்க வைத்துள்ளது என்கிறார்கள். பாஜகவின் சட்டப்பேரவை கணக்கும் மோடி கூறிய இந்த வார்த்தையின் அடிப்படையிலானது தான் என்கிறார்கள். திமுக அதிக இடங்களில் வென்றாலும் கூட பெரும்பான்மை கிடைத்துவிடக்கூடாது என்று பாஜக கருதுகிறது. இதனை மனதில் வைத்தே பாஜக – அதிமுக கூட்டணி காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலை போல திமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் பார்த்துக் கொண்டால் போது மறுபடியும் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கப்படும் என்று ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரையே ஆளும் தரப்பு விலை பேசிவிடும் என்கிறார்கள். அதன் பிறகு தேர்தல் முடிந்து எம்எல்ஏ ஆனாலும் கூட அமைச்சர் பதவி, பணம் என வழக்கமான விஷயங்கள் மூலம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என பாஜக கணக்கு போடுவதாக சொல்கிறார்கள். இதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதை பிரசாந்த கிஷோரும் உறுதிப்படுத்தியதால் தான் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

click me!