
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற பன்னீர் ஒரு செல்லாக்காசு என்பதை விரைவில் அவரும் அவரது ஆதரவாளர்களும் உணருவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாட்டில் விவசாயிகளைப் பாதுகாக்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் மாடுகளை சந்தைபடுத்துதலில் உள்ள விதிமுறைகளில் மட்டுமே இந்த மாற்றங்கள் நடைமுறை படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது தவறானது. யாரையும் தாக்க யாருக்கும் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. இந்தியாவில் திராவிட நாடு என்று எதுவும் இல்லை. வரலாற்றுப் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் திராவிட நாடு அழிக்கப்பட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்துவருகிறது. அதிமுகவில் இரு அணிகள் என்பதில்லை. பன்னீர் மட்டுமே அதிமுக'வில் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார்.
விரைவில் அவர் தான் ஒரு செல்லாக்காசு என்பதை உணர்வார். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவும் ஆதரவு அளிப்பதால், தனிப் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.