
யார், எந்த கட்சி ஊழல் செய்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் உணர்த்தியுள்ளது என்று சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து பாரதியஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, வழக்கைத் தொடர்ந்தவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி டெல்லியில் நேற்று கூறியது-
சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி முடிவு கிடைக்க கடந்த 20 ஆண்டுகளாக போராடி, காத்துக்கொண்டு இருந்தேன். நீதிபதிகள் பி.சி. கோஷ்,அமித்தவா ராய் ஆகியோர் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளனர். நீதிபதிகள் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் தீர ஆய்வு செய்து, இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளனர். இந்த தீர்ப்பு மூலம் ஊழல் யார் செய்தாலும், எந்த கட்சி செய்தாலும், நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.
நான்தான் இந்த வழக்கை தொடர்ந்தவன் என்ற முறையில், நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்து எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் அளித்துள்ளது. சமூகத்தில் இருந்து ஊழல் என்பது கவலை தரும் விசயமாக இருக்கிறது என்று நீதிபதி அமித்தவா ராயின் கூறியுள்ளார். மேலும், சமூகத்தில் ஊழல் வளர்ந்துவருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார்.