
2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பிலிருந்து ஊழலுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால், அரசுக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்துவந்தது.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரித்து வருகிறார். வழக்கின் வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இருதரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. ஊகங்கள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில்தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவே தவிர போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. அதனால், ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பில், வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் உற்சாகமாக செயல்பட்ட சிபிஐ, நாளடைவில் அலட்சியாக செயல்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஊழலுக்கு எதிராக செயல்பாடுகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, 2ஜி வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டபோதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். முகுல் ரோகத்கி, யுனிடெக் உட்பட சில முறைகேடுகளில் தொடர்புடைய சில நிறுவனங்களின் வழக்கறிஞராக இருந்து வருவதால், அவரை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கக்கூடாது என வலியுறுத்தினேன். ஊழலை ஒழிக்க இந்த மாதிரியான அதிகாரிகள் முனைப்பு காட்டுவதில்லை.
வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் உற்சாகமாக செயல்பட்ட அதிகாரிகள், நாளடைவில் அலட்சியம் காட்டியதாக நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார். இதுபோன்ற அதிகாரிகள் ஊழலை ஒழிப்பதில் சற்றும் அக்கறை காட்டுவதில்லை. 2 ஜி வழக்கின் தீர்ப்பு மிகவும் தவறான தீர்ப்பு. ஆனால், இந்த தீர்ப்பு எந்தவகையான பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. உடனடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
ஊழலுக்கு எதிராக மத்திய பாஜக அரசு போராடி வருகிறது. ஊழலுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடிக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய பாடம். ஊழலுக்கு எதிரான போராட்டம் சற்று நிலை தடுமாறியிருக்கிறது. மத்திய அமைச்சர்களுக்கு முகஸ்துதி பாடி, அவர்களின் விருப்பப்படி நடந்துகொள்ளும் அதிகாரிகளை நீக்கிவிட்டு, நேர்மையான அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் நியமிப்பதன் மூலம் ஊழலை ஒழிக்கும் பயணத்தில் மீண்டும் சரியான பாதையில் செல்ல முடியும். நேர்மையான அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து விரைவில் இந்த தீர்ப்பை மாற்றி நியாயமான தீர்ப்பை பெற வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.