பேனர் வைத்துதான் பிரதமரை வரவேற்க வேண்டுமா..? தமிழக அரசுக்கு சுபஸ்ரீயின் தாய் கேள்வி!

By Asianet TamilFirst Published Oct 4, 2019, 7:29 AM IST
Highlights

இனி பேனர் வைக்கமாட்டோம் என சில அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும், சிலர் பேனர் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் அளித்தன. பேனர் விஷயத்தில் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின. தற்போது தமிழகத்தில் மீண்டும் பேனர் வைக்கிறோம் எனக் கூறுவது வேதனையாக உள்ளது.
 

பேனர் வைத்துதான் பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்க வேண்டுமா என்று பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வைத்த சட்ட விரோதமான பேனர் விழுந்து, அதனால் லாரி ஏறிய விபத்தில் சுபஸ்ரீ என்ற 22 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தைத் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இந்த மரணம் ஏற்படுத்தியது. சுபஸ்ரீ இறந்த வழக்கை கையில் எடுத்த நீதிமன்றம் அரசுக்கு அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. 
இந்நிலையில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இரு தலைவர்களையும் வரவேற்பதற்காக 14 இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேனர் வைக்க அறிவுறுத்திய நீதிமன்றம், அதற்கான விதிமுறைகளைக் கடைபிடிக்கவும் கூறியது. பேனர் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியது பேசு பொருளாகியிருக்கிறது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 
இந்நிலையில் பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் தாய் கீதாவும் பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “சுபஸ்ரீ இறந்தபோன சம்பவத்தை இன்னும்கூட மறக்க முடியவில்லை. இனி பேனர் வைக்கமாட்டோம் என சில அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும், சிலர் பேனர் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் அளித்தன. பேனர் விஷயத்தில் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின. தற்போது தமிழகத்தில் மீண்டும் பேனர் வைக்கிறோம் எனக் கூறுவது வேதனையாக உள்ளது.


பேனரால்தான் என்னுடைய மகள் சுபஸ்ரீ உயிரிழந்தார். அது போன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். பிரதமரை வரவேற்க பேனர் மட்டும்தான் இருக்கிறதா? வேறு வழிகளிலும் அவரை வரவேற்கலாமே?” என கீதா தெரிவித்துள்ளார். 

click me!