சுபஸ்ரீ மரணம்: பேனர் கீழே விழ காரணமாக இருந்த காற்று மீது வழக்குப் போடுங்கள்... அதிமுக முன்னாள் அமைச்சரின் துடுக்கு பேச்சு!

By Asianet TamilFirst Published Oct 5, 2019, 10:09 PM IST
Highlights

பேனர் வைக்கும் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல்? ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் எதுவும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கனவே இருந்துவருகிறது. கருணாநிதி இருந்தபோதும் அதை கடைபிடித்தார். இப்போது ஸ்டாலினும் அதை கடைபிடித்துக்கொண்டிருக்கிறார்.

 பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில்  வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்க பேனர் வைக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற விவகாரம் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. பேனர் விழுந்ததால், லாரியில் அடிப்பட்டு சுபஸ்ரீ உயிரிழந்து 3 வாரங்களே ஆகும் நிலையில், பேனர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இ ந் நிலையில் பேனருக்கு திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி சர்ச்சையாகி இருக்கிறது.
அந்தப் பேட்டியில், “இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் இரு நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். பேனர் வைக்கும் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல்? ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் எதுவும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கனவே இருந்துவருகிறது. கருணாநிதி இருந்தபோதும் அதை கடைபிடித்தார். இப்போது ஸ்டாலினும் அதை கடைபிடித்துக்கொண்டிருக்கிறார்" என பொன்னையன் தெரிவித்தார்.


சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பேனர்கள் வைப்பது, மக்கள் மத்தியில் அதிமுக மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பொன்னையன், “இந்த விஷயத்தில் மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார்; அதைப் பெரிதுபடுத்துகிறார் என்றே மக்கள் நினைக்கிறார்கள். அந்தப் பெண் வண்டியில் செல்லும்போது, காற்று வீசியதால்தான் பேனர் கீழே விழுந்தது. பேனர் வைத்தவர் அதை தள்ளிவிட்டா அப்பெண்ணை கொன்றார்? இல்லையே, இந்த விவகாரத்தில்  வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்" எனக் கிண்டலாகப் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சுபஸ்ரீ இறந்த வழக்கில் லாரி டிரைவர் கைது, பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்த நடவடிக்கையே மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காற்று மீது வழக்குப் போடுங்கள் என்று பொன்னையன் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. 

click me!