பிலிப்பைன்சில் சிக்கி தவித்த மாணவர்கள் நாடு திரும்புகின்றனர். துடித்த அன்சாரி.. மீட்டது தமிழக அரசு.

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2020, 1:33 PM IST
Highlights

புதன் கிழமை மதியம் தலைமைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களை அலைபேசியில்  தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்திய வெளியுறவு துறை மூலம் மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை  மேற்கொண்டு அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்

பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் மஜக பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி MLA வலியுறுத்திய நிலையில் அம்மாணவர்கள் நாடு திரும்ப அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்குள்ள 90 பேரில் 60 பேர் இன்று நாடு திரும்ப உள்ளனர். 

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது முதல் உலக நாடுகள் முற்றிலுமாக விமான போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளன. இதன் காரணமாக  வெளிநாடுகளில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக சென்ற பயணிகள் ஆங்காங்கே முடங்கும் நிலை உருவானது. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள குடிமக்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற தமிழக மாணவர்கள் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் விமான சேவை கிடைக்காமல் தாயகம் திரும்ப வழியின்றி தவிக்கும் செய்திகள் வலைதளங்களில் தகவல் வெளியானது இதனையடுத்து. அம்மாணவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி தலைமை செயலாளரிடம் வலியுறுத்தினார். 

புதன் கிழமை மதியம் தலைமைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களை அலைபேசியில்  தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இந்திய வெளியுறவு துறை மூலம் மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை  மேற்கொண்டு அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடனே இது குறித்து விசாரித்து உரிய முயற்சிகள் எடுப்பதாக தலைமை செயலாளர் அவர்களும் உறுதியளித்திருந்தார்.  அதனடிப்படையில் தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இன்று காலை தமிழக முதல்வரின் தனி செயலாளர் திரு. செந்தில் IAS அவர்கள், அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்களிடம் தெரிவித்தார்.

 

அதில் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களில் 60 பேர் இன்று நாடு திரும்புவார்கள் என்றும் மீதமுள்ள 30 பேர் அடுத்தடுத்து திரும்புவார்கள்  என்றும் தெரிவித்தார். உடனே நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு தமிழக அரசுக்கு அன்சாரி நன்றி தெரிவித்துக் கொண்டார். அயலக தமிழர்களின் நலன் காக்கும் எம்எல்ஏ அன்சாரியில் இந்த முயற்சிக்கும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

click me!