ஹிஜாப் உடையை கழற்ற சொன்னதால் மனஉளைச்சலில் மாணவிகள்.. தேர்வு அதிகாரியை விடக்கூடாது.. கொதிக்கும் ஜவாஹிருல்லா!

By Asianet TamilFirst Published May 14, 2022, 9:47 PM IST
Highlights

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையைக் கடந்து துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சரஸ்வதி என்பவர் மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன உளைச்சலுடன் ஹிஜாப் ஆடையை அகற்றி விட்டு சீருடையுடன் தேர்வு எழுதியுள்ளனர். 

இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் தமுமுகவினரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆசிரியர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட சரஸ்வதியை உடனடியாக வேறு பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதவெறுப்பு அரசியலின் பின்னணியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததன் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவானது. 

தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான மாநிலம். இங்கு பள்ளிக் கல்வி அமைச்சர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை இல்லை என்று அறிவுறுத்தியும் பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிந்து வர தமிழகத்தில் எந்தவித தடையுமில்லை என்று பதிலளித்தும் இருக்கின்றனர். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையைக் கடந்து துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

click me!