
மாணவர்களின் போராட்டத்தில், சில அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பதுபோல் நடித்து சூழ்ச்சி செய்ய முயல்வதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு புதிய சட்டம் திருத்தி கொண்டு வந்தாலும், அதை தடை செய்ய உச்சநீதிமன்றத்தால் முடியும்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல்,, பல்வேறு அமைப்பினர் தவறான சூழ்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது. மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என புரியவில்லை. எனவே, இந்த போராட்டத்தில் சூழ்ச்சி இருப்பதால் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் இவ்வளவு கடுமையாக போராடி தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினாலும், அது போராட்டமாகவே அமையும். ஜல்லிக்கட்டு விளையாட்டாக இருக்காது
இவ்வாறு அவர் கூறினார்.