மற்றுமொரு ஜல்லிக்கட்டு போராட்டம்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களத்தில் குதித்த மாணவர்கள்

First Published Mar 26, 2018, 11:03 AM IST
Highlights
student protest against sterlite copper plant


தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த ஆலையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு என்ற நச்சு வாயு வெளியானதால், அந்த ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றிய பல கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. விஷவாயு கசிவால், சுற்றுவட்டார பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையே மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஆலை விரிவாக்கப்பட்டால், மக்கள் வாழ்வதற்கே ஏற்ற பகுதியாக இது இருக்காது எனக்கூறும் அப்பகுதி மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்பின்னர், 40 நாட்களாக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து அமைதியாக போராட்டம் நடத்தினர். ஆனால், கடந்த 24ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 20000க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்திய பொதுக்கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், மாணவர்களும் களத்தில் குதித்துள்ளனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றொரு ஜல்லிகட்டு போராட்டமாக அமைந்து மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
 

click me!