
ஷிமோகாவில் ஒரு பள்ளியில், மாணவர்கள் தேசிய கொடியை இறக்கி, காவி கொடியை ஏற்றியதாக ஒரு தவறான வதந்தியை ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் நேற்று பரப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேசம் குறித்தோ, தேசிய கொடி குறித்தோ பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை என்பதே உண்மை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஷிமோகாவில் ஒரு பள்ளியில், மாணவர்கள் தேசிய கொடியை இறக்கி, காவி கொடியை ஏற்றியதாக ஒரு தவறான வதந்தியை ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் நேற்று பரப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த கொடி கம்பத்தில் அந்த நேரம் எந்த கொடியும் பறக்கவில்லை என்பதும் காலியாக இருந்த கம்பத்தில் தான் காவிக்கொடி ஏற்றப்பட்டது என்பதே உண்மை.
ஆனால், அதற்குள்ளாக தேசிய கொடி அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் பரபரப்பாக குற்றம் சாட்டியது அவர்களின் அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கடந்த வருடம் குடியரசு தினத்தன்று டில்லியில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடியை இறக்கி போராட்டக்காரர்கள் தங்களின் கொடியை ஏற்றிய போது வாய் மூடி மௌனமாக இருந்தவர்களுக்கு, போராட்டக்காரர்களை தூண்டி விட்டு தேசத்திற்கு எதிராக நடந்து கொண்டவர்களுக்கு, தேசம் குறித்தோ, தேசிய கொடி குறித்தோ பேசுவதற்கு தகுதி இல்லை என்பதே உண்மை என நாராயணன் திருப்பதி காட்டமாக தெரிவித்துள்ளார்.