கவுன்சிலர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை.. வார்னிங் கொடுத்த மேயர் பிரியா.

Published : Apr 01, 2022, 01:52 PM IST
கவுன்சிலர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை.. வார்னிங் கொடுத்த மேயர் பிரியா.

சுருக்கம்

அதை மீறி யாரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது அவர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்கள் மீது தலைமை கடுமையான  நடவடிக்கை எடுக்கும். கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி  என்ன என்பது தெரியும். 

பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரித்துள்ளார். யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள்தான் தங்கள்  பணியை செய்ய வேண்டும் என்றும் அதை மீறி அவர்களது கணவர்கள் அவர்களை தவறாக வழி நடத்தினால் அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், கவுன்சிலர்கள் கூட்டும் பஞ்சாயத்துக்கள் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. பெண் கவுன்சிலரின் கணவன்மார்கள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர் என்பதே அது. வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலிப்பது, காவல்துறையை நடுரோட்டில் வைத்து அசிங்கமாக பேசிய அவமானப்படுத்துவது போன்ற அலப்பறைகள் ஆங்காங்கே ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் இல்லை என்றால் அது கட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  காவலரை தரக்குறைவாக பேசி இழிவுபடுத்திய கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்ய வேண்டுமென மக்கள் சமூகவலைதளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து திரும்பியவுடன் அவர்கள் மீதான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திறந்துவைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் உடனிருந்தனர்.  அதைத்தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மேயர் பிரியா, பாலின நிகர் மேம்பாடு மையம் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுப்பதற்காகவும் இத்திட்டம்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றார்.

பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அட்ராசிட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரியா, யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள்தான் அந்த பணியை செய்ய வேண்டும். யார் கவுன்சிலரோ அவர்கள் அவர்கள் பணியை செய்ய வேண்டும். அதை மீறி யாரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது அவர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்கள் மீது தலைமை கடுமையான  நடவடிக்கை எடுக்கும். கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி  என்ன என்பது தெரியும். ஏதேனும் அவர்களுக்கு தெரியாத பட்சத்தில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்றார். 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!