முககவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: இதுவரை1 கோடியை 85 லட்சம் அபதாரம் வசூல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 11:36 AM IST
Highlights

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்கள். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ள நிலையான, பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் பொது இடங்களுக்குச் செல்லும்போது தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

மேலும் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில், கைகளை சுத்தம் செய்ய சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் திரவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுநாள்வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் 15  மண்டலங்களிலும் முகக் கவசம் அணியாத நபர்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங் களிடமிருந்து ரூபாய் 1,85,67,117 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத, தனியார் அல்லது தொழில் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

 

click me!