வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவாக்கணும்... திருமாவளவன் வலியுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 20, 2021, 11:42 AM IST
Highlights

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் இந்தியா முழுவதும் இருந்த போதிலும் அதனை மக்களை பாதுகாக்க கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கடி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம் பெறக்கூடிய ஒரு விரிவான குழுவாக அமைக்கப்பெற்று இந்த கூட்டம் இன்றைக்கு முதல்முறையாக கூடியது. கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் இது குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

மாண்புமிகு முதல்வர் கனிவோடு எமது கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக் கொண்டார். அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதை போல தமிழகத்திலும் சிறப்பு காவல் நிலையங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் என ஏற்கனவே 14 நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்றாலும் மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறோம்.

ஆகவே சட்டப்படி அந்த சட்டத்தில் உள்ளபடி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். வன்கொடுமை என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் இருந்ததைப் போன்ற ஒரு மெத்தனப்போக்கு இல்லாமல் இதை மக்களைப் பாதுகாக்க கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் வலியுறுத்தி இருக்கிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பது ஒரு மகத்தான சமூக புரட்சி இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய ஒரு முன்னோட்ட நடவடிக்கை. பெரியார் கண்ட கனவை நனவாக்க கூடிய வகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு சமூகநீதி அரசாக இயங்குகிறது. சமூகநீதிக்கு எதிரான அச்சுறுத்தல் எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய வலிமையும் துணிவும் முதல்வருக்கு இருக்கிறது. எனவே இதைப் பற்றிய விமர்சனங்களை அவர் பொருட்படுத்தப் போவதில்லை. அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவது என்ற நம்பிக்கை உள்ளது’’என அவர் தெரிவித்தார்.

click me!