வாகன ஓட்டிகளே இதுக்கு தயார்னா ரோட்டுக்கு வாங்க.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் அபதாரம் உறுதி..

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2021, 11:41 AM IST
Highlights

இதனால் போக்குவரத்து போலீசார் நேரடியாக அபராதம் விதிக்கும் முறை குறையும் என்றும், அதனால் லஞ்ச குற்றச்சாட்டு எழுவதும் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது

.

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மின்னணு முறையில் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவுரைத்துள்ளது. சாலை விதிமுறைகளை இதன் மூலம் துல்லியமாக கடைபிடிக்க முடியும் என்றும், விதி மீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்க மின்னணு முறையில் சரியான முடிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பெருந் தொற்று, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் என ஏராளமான உயிர்களை நம் நாடு பறிகொடுத்து வருகிறது. இதற்கிடையில் சாலைவிபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உரியதாக உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 4 லட்சத்து 70 ஆயிரம் சாலை விபத்துக்கள் பதிவாகிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரம் ஆக இருந்து வருகிறது. 

இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேருக்கு 11 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என புள்ளி விவரங்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணம்  பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே ஆகும்.  சாலை விதிகளை பின்பற்றுவது தனி மனித ஒழுக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், எப்போதும் அதிகாரிகள் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது என்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிக்கும் வகையில் மாநில அரசுகள் ஒவ்வொன்றும் மின்னணு கண்காணிப்பு முறையை அமலாக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மின்னணு முறையில் சாலை விதிமுறைகளை கண்காணிப்பது, விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் முறையை அமல்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வேகத்தை கண்காணிக்கும் கேமரா, துல்லியமாக காட்சிகளை பதிசெய்யும் சிசிடிவி கேமரா,  நம்பர் பிளேட்டுகளை அடையாளம் காணும் தானியங்கி இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப கருவிகளை பொருத்தவும், 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமுள்ள 136 நகரங்களில் இதை அமல் படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து அபராதம் ஆகியவற்றை விதிப்பதை உறுதி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் போக்குவரத்து போலீசார் நேரடியாக அபராதம் விதிக்கும் முறை குறையும் என்றும், அதனால் லஞ்ச குற்றச்சாட்டு எழுவதும் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வாகன ஓட்டிகள் மிகத் துல்லியமாக சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அபராத கட்டணம் வீடு தேடி வரும் என்றும் விவரம் அறிந்தவர்கள் எச்சரிக்கின்றனர். 
 

click me!