ஆளுநருக்காக இனியும் காத்துக்கிடக்கணுமா.? 7 பேரை ரிலீஸ் பண்ணிவிடுங்க.. மு.க.ஸ்டாலினை உசுப்பேத்தும் விசிக.!

By Asianet TamilFirst Published Nov 29, 2021, 8:35 PM IST
Highlights

 "மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்று வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்."

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா? என்று விசிகவைச் சேர்ந்த வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால்,  நீண்ட நாட்களாக இந்த விவகாரத்தை ஆறப்போட்ட ஆளுநர், அவர்களை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில்  தன்னை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்யக்கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க தகுதியானவர் என சொல்லி, ஆளுநர் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும். உச்ச நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகளின்படி நளினியின் மனு ஏற்கத்தக்கதல்ல. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  மேலும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனு தொடர்பாக விசிகவின் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “முப்பதாண்டுகளாக சிறையில் வாடுகிறார் சகோதரி நளினி. விடுதலைக் காற்றை சுவாசிக்க காத்திருக்கிறார். வெளிச்சக்கீற்றை காண எதிர்பார்த்திருக்கிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்று வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

tags
click me!