
இன்றைய காலை நேரப் பரபரப்பு, தமிழகத்தில் பரவலாக, சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில், சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனைதான். குறிப்பாக, டிடிவி தினகரனின் வீடு, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா மாநிலம் என பல இடங்களில், சுமார் 180க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரு நாளில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை எல்லாம், அண்மையில் கண்டறியப் பட்ட போலி நிறுவனங்கள் எவர் பெயரில் எல்லாம் பதிவு செய்யப் பட்டிருந்ததோ அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சோதனை என்பதை அவ்வளவு எளிதாக எல்லாம் உடனே எடுத்துவிட முடியாது. இதற்குப் பின் பல நாட்கள் உழைப்பு தேவைப்படும். அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தொடங்கி, கடை நிலை பணியாளர் வரை ஒவ்வொரு இடத்துக்கும் பணியைக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைபெறும் இந்தச் சோதனைகளுக்கு பல நாள் உழைப்பு தேவைப்படும். அந்த வகையில், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரே, சசிகலா பெயர், போலி நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதே... இந்த சோதனைகள் நடக்கும் என்பது பலராலும் எதிர்பார்க்கப் பட்டது தான்.
எனவே இது திடீர் திட்டமிடல் இல்லை. இதற்கு சுமார் ஒரு மாதம் முன்பே இன்ச் பை இன்ச் ஆக காய் நகர்த்தி, திட்டமிட்டு, காவலர்களைத் தயார் செய்து, அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களைக் கொடுத்து, திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதனை ஒரு விஷயம் எளிதாக இன்று காட்டிவிட்டது. அதிகாரிகள் வெகு நாட்களுக்கு முன்பே, கால் டாக்ஸிகளை புக் செய்திருந்தனர். அந்த கால் டாக்ஸிகளில் எல்லாம், தாங்கள் திருமண விழாவுக்குச் செல்வது போன்ற மண விழா ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து, சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை பேரை சோதனைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றால், எவரும் விஷயத்தை கசிய விட்டு, விசுவாசத்தைக் காட்டி விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உன்னிப்பாக இருந்துள்ளனர். எனவேதான், இப்படி கார்களில் கல்யாண வீட்டு ஸ்டிக்கர்களை ஒட்டி கால் டாக்ஸிகளை கூட புக் செய்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.