
வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை ஆகியவற்றை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டதாகவும் இதற்கெல்லாம் தனது குடும்பத்தினர் யாரும் அஞ்சமாட்டார்கள் எனவும் தினகரன் மிகவும் கூலாக தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லம், மன்னார்குடியில் உள்ள தினகரன் இல்லம், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றின் பெயரில் நஷ்ட கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மத்திய அரசின் உந்துதலின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
வருமான வரி சோதனையைப் பற்றி எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத தினகரன், சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் மனைவியுடன் கோ பூஜை செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:
எனது வீட்டில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது நானும் என் மனைவியும் கோ பூஜையில் கலந்துகொண்டதாக செய்தி வெளியாகிறது. எனது வீட்டில் வருமான வரி சோதனையே நடைபெறவில்லை. காலையில் ஒரு அதிகாரி மட்டும் வந்தார். பின்னர் அவரும் சென்றுவிட்டார்.
புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். படிப்பறிவில்லாத இருவர், அந்த பண்ணை வீட்டு பராமரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வீட்டில் வருமான வரித்துறையினர், அவர்களாகவே எதையாவது வைத்துவிட்டு அங்கிருந்து எடுத்ததாக காட்டிவிடக்கூடாது. அதனால் எனது வழக்கறிஞர்களை அங்கு அனுப்பியுள்ளேன். ஒருவேளை அவர்களாகவே வைத்துவிட்டு எடுத்தால்கூட அதையும் எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.
மன்னார்குடியில் யாருமே இல்லாத வீட்டில் சோதனை நடக்கிறது. வருமான வரித்துறையின் சோதனைகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். சிறு வயதிலேயே வருமான வரித்துறை, சிபிஐ சோதனை என அனைத்தையும் பார்த்துவிட்டோம். அப்படி இருக்கையில், இந்த சோதனைகளெல்லாம் எங்களை அச்சுறுத்தாது.
எதையும் சந்திக்க தயாரான என் குடும்பத்தினர் யாரும், இந்த சோதனைக்கு பயப்படமாட்டார்கள். சசிகலாவையும் தினகரனையும் அரசியலை விட்டு விரட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு வருமான வரி சோதனை குறித்து தினகரன் பேசியுள்ளார்.