
வருமான வரித்துறையை ஏதோ ஒரு அதிகார மையம் பயன்படுத்தி தினகரன் - சசி சொத்துக்களில் ரெய்டு நடத்தியதன் மூலம் அவர்களை மிரட்டி கார்னர் செய்ய நினைத்திருந்தால் அது ‘பிள்ளையார் பிடிக்கப்ப் போய் குரங்கான கதை’ தான்.
ஏன் அப்படி?
தமிழகம் முழுக்க தங்கள் சொத்துக்களை நோண்டி நொங்கெடுத்து வருமான வரித்துறை ரெய்டடித்துக் கொண்டிருக்கையில் சென்னையில் தன் வீட்டில் கூல் ஆக கோ பூஜை நடத்திக் கொண்டிருந்தார் தினகரன். பின் அதைவிட கூலாக வெளியே வந்து பேட்டி தட்டிய டிடிவி, “இந்த ரெய்டு நூறு சதவீதம் ஒரு மிரட்டல் முயற்சிதான். எங்களை வேண்டுமென்றே குறிவைத்து, உள்நோக்கத்துடன் இதை பண்ணிட்டிருக்காங்க.
ஆனா வருமான வரித்துறை வந்து ரெய்டு பண்ணி தூக்குற அளவுக்கு எங்ககிட்ட என்னங்க இருக்குது? எம்.பி. பென்ஷன்லதான் என் வாழ்க்கையே ஓடுது. நாங்க என்ன கோடி கோடியா சேர்த்து பதுக்கியா வெச்சிருக்கோம்?” என்று குபீர் கிளப்பியவர், “எந்த குரூப் கையில கோடிக்கோடியா குவிஞ்சு கிடக்குதுன்னு வருமான வரித்துறைக்கும், அதை ஏவியவங்களுக்கும் தெரியாதா? அங்கே போயி நடத்த வேண்டிதானே ரெய்டை!” என்று தங்கள் பங்காளிகளின் பேங்க் பேலன்ஸை சொல்லாத குறையாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.
தினகரன் இப்படி சொல்லி முடித்ததும், அவருக்கு பின் பக்கமிருந்த ஆதரவாளர் ஒருவர், ‘தலைவா இன்னும் சில மாசங்கள்ள ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலேயும் இப்படி ரெய்டு நடந்து அள்ளிக்கிட்டு போவாங்க பாருங்க. நிலைமை இப்போ மாற ஆரம்பிச்சிடுச்சு.’ என்று அந்த சூழலுக்கு எக்ஸ்ட்ரா சூட்டை கிளப்பிவிட்டார்.