ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்... வைகோ, நல்லக்கண்ணு, பிரேமலதா மீதான வழக்குகள் ரத்து... தமிழக அரசு அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 26, 2021, 1:28 PM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 

கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக  ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. 

இதுதொடர்பான அறிக்கையும் அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளார். அதில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்ப பெற பரிந்துரைக்கப்பட்டிருந்து. எனவே ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில் மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

அதுமட்டுமின்றி காவல் துறையினர் கைது நடவடிக்கையால் காயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்களான நல்லகண்ணு, வைகோ, டிடிவி தினகரன், கே.பாலகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

click me!