
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் தற்போது எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்ற வரும் நிலையில், லண்டன் தமிழகர்களும் அங்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த அனில் அகர்வால் என்ற இந்தியரின் வேதாந்தா குழுமம், கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர ஆலையை திறந்தது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ம் ஆண்டு முதலே அங்கு போராட்டங்கள் தொடங்கின.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தற்போது விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு புதிய உருக்கு பிரிவு ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி இருக்கிறது. இது ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருந்த மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த ஆலையை மூடக்கோரி அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அங்கு நடந்த மிகப்பெரும் போராட்டம், கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடி மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லண்டனிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் வேதாந்தா குழுமங்களின் தலைவர் அனில் அகர்வாலின் May fair வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறையடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.