
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்று மீண்டும் கலவரத்தில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வ கணேஷ் என்பவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில், கர்நாடகவில் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்திய அரசியலில் இந்த சம்பவம் ஒரு சிறப்பான நிகழ்வாகக் கருதப்பட்டது.
இந்நிலையில் குஜராத் எம்.எல்.ஏ ஜிகேஷ் மேவானி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ``குமாரசுவாமி பதவியேற்பு விழாவில் ஏதேச்ச அதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.” என அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலின்போது, ஜிக்னேஷ் மேவானியும், நடிகர் பிரகாஷ் ராஜும் இணைந்து மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.