ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து நாளை தமிழகத்தில் பந்த்…

First Published May 24, 2018, 6:12 AM IST
Highlights
sterlite issue tommorrow bandh in all over tamilnadu


தூத்துக்குடி வன்முறை சம்பவத்தைக் கண்டித்துதிமுக தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் நாளை வெள்ளிக் கிழமை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற  போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து  தமிழகத்தில்  நாளை தி.மு.க. தலைமையில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியோ, அமைச்சர்களோ இதுவரை தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவோ, தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால்  தனியார் ஸ்டெர்லைட் ஆலையின் நலன்களுக்காக தூத்துக்குடியையே போர்க்களமாக்கி, பொதுமக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்..

இந்நிலையில் நாளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் , அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விபரீதமான துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் நானை தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாக தோற்றுவிட்ட அ.தி.மு.க. அரசு பதவி விலகக் கோரியும் இந்த பந்த் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் தி.மு.க, காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும்  என  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!