
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் கூடியது. இன்றைய சட்டமன்ற கூட்டத்தின்போது, நகராட்சி
நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
சட்டசபைக்கு மீண்டும் செல்ல உள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து கடந்த 4 நாட்களாக அவையை புறக்கணித்த திமுக
எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, மக்களை பலியிட்டு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்றார். தமிழ்நாட்டில் தாமிர உருக்கு ஆலை வேண்டாம் என தீர்மானம் போட்டு சட்டம் இயற்ற வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் ஆலை செலுத்திய ரூ.100 கோடி
அபராதத் தொகை எங்கே என்றும் ஸ்டாலின் கேள்வி கேட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தேவை என்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்
மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் தூத்துக்குடி பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குறிபார்த்து சுடும் காட்சி
வெளியாகி உள்ளதாகவிம் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இனி யாரும் திறக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட்
ஆலைக்கு சீல்வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாகவும் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து
அரசாணை வெளியிடப்பட்டது என்றும் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.