
.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த ஆலைக்கு அருகே உள்ள குமரெட்டிபுரம் மக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற மிகப்பெரிய ஊர்வலம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்டோர் அந்த கிராம மக்களுக்கு ஆதரவு அளித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போராட்டக் களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவை வழங்கினார்.
இந்நிலையில் போராட்டத்தின் 100 ஆவது நாளான நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது திடீரென கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வ கணேஷ் என்பவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இன்று காலை 5.15 மணி முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தமிழக அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனிடையே போராட்டத்தின் தீவிரத்தை தணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர். சந்துப் நந்தூரி புதிய ஆட்சியராகவும், முரளி ரம்பா எஸ்.பி. யாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் அமைதியை நிலை நாட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். போராட்டத்தில் 19 பேர் படுகாயமும், 83 பேர் லேசான காயமுமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம். தூத்துக்குடி சம்பவத்தில் இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் 98 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களில் ரூ.1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது என கூறினார்..
தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள் திறந்துவைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என்றார்.
மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசித்து வருகிறோம். தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் அந்த ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இதன் முதல் கட்டமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனிடையே ஸ்டெர்லைட் கம்பெனியின் உரிமையாளர் அனில் அகர்வால், தனது டுவிட்டர் , தற்போது வருடாந்தர பராமரிப்புக்காக ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெற்று ஆலை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தது.