
100 நாள் போராட்டம்…. உண்ணாவிரதம்….துப்பாக்கி சூடு….. 13 பேர் உயிரிழப்பு என பல சம்பவங்களுக்குப் பின் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், இனி இந்தியாவுக்கான தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் , இந்தியாவின் தாமிர உற்பத்தியில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்தது.
ஆனால் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, துாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்று ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, தாமிர உற்பத்தி முடங்கியுள்ளதால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவின் தாமிர உற்பத்தி, 8.42 லட்சம் டன்னாக இருந்தது. இதில், ஸ்டெர்லைட் ஆலை மட்டும் 48 சதவீத தாமிரத்தை உற்பத்தி செய்து கொடுத்து வந்தது. அதே நேரத்தில் தொழில் வளர்ச்சி, அதிகரிக்கும் தேவை போன்ற பல காரணங்களால் தாமிரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.
பொறியியல் மற்றும் மின்னணு சாதனங்கள், வாகனம், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றில் தாமிரத்தின் தேவையை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு, 4 லட்சம் டன் தாமிர உற்பத்தியை மேற்கெண்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, அதன் விரிவாக்க நடவடிக்கையில் இறங்கியது. ஆனால், தற்போது, போராட்டம் காரணமாக வழக்கமான செய்யப்படும் உற்பத்தியை கூட மேற்கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், ஜெயந்தா ராய் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்டின் தற்போதைய தாமிர உற்பத்தி, உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக உள்ளது. அதனால், தாமிரம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பெருகி வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் காரணமாக, தாமிரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில், சரிபாதி பங்களிப்பை கொண்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளை இனி எங்குமே தொடங்க முடியாத நிலையே ஏற்படுள்ளது.
இதனால், தாமிரத்தின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் ஜெயந்தா ராய் அவர் தெரிவித்தார்