மோடியின் அலை ஓய்ந்துவிட்டது; இடைத்தேர்தல் முடிவுகள் அதைதான் சொல்லுது - திருநாவுக்கரசர் பளீச்...

First Published Jun 1, 2018, 9:20 AM IST
Highlights
Modi wave end bi election results shows that Thirunavukkarar


நாமக்கல்
 
நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இடைத்தேர்தல் முடிவுகள் மோடியின் அலை ஓய்ந்து விட்டதை காட்டுகிறது என்று தமிழக காங்கிரசு கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

நாமக்கல்லில், தமிழக காங்கிரசு கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தமிழகத்தில் காங்கிரசு கட்சிக்கு இதுவரை 35 இலட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதனை 50 இலட்சமாக உயர்த்த இலக்கு உள்ளது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்தில் ராகுல்காந்தி வருகை தந்து கட்சி கூட்டங்களில் பங்கேற்பார்.

தமிழகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும், அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒன்றாக வர வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முன்கூட்டியே போராட்டக்காரர்களிடம் பேசியிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்திருந்தால் அது மாநில அரசு, காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் தோல்வியாகவே கருதப்படும். அங்கு சமூக விரோதிகள் யாரும் இல்லை. 

எல்லாவற்றுக்கும் போராடினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். அதேநேரத்தில் அரசுகள், மக்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டால் போராடித்தான் ஆக வேண்டும். அவ்வாறு போராடவில்லை என்றாலும் தமிழகம் சுடுகாடாகிவிடும்.

நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இடைத்தேர்தல் முடிவுகள் மோடியின் அலை ஓய்ந்து விட்டதையும், காங்கிரசு தலைவர் ராகுல்காந்தியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையுமே காட்டுகிறது. 

கர்நாடக மாநிலத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைக்க நினைத்த பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட்டுவிட்டது. எதிர்வரும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசு கட்சி மகத்தான வெற்றி பெறும்.

மத்தியில் பா.ஜனதா அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் வேலைவாய்ப்பு பெருகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. வறுமையில் உள்ளவர்கள் மேலும் நலிவடைந்து விட்டனர். 

நான்கு ஆண்டுகால சாதனைகளை பா.ஜனதா கொண்டாடும் அதே வேளையில், மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக்கூறும் வகையில் காங்கிரசு கட்சி சார்பில் விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். 

காவிரி நீர் பங்கீட்டை பொறுத்தமட்டில் கர்நாடகாவில் இப்போதுதான் புதிய ஆட்சி அமைந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும், நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

click me!