தீபாவளி பரிசாக எதிர்பார்ப்பில் இருக்காங்க.. இதை உடனே செய்யுங்க.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ்ஸின் ஒற்றை கோரிக்கை!

By Asianet TamilFirst Published Oct 22, 2021, 9:45 PM IST
Highlights

தமிழகத்தில் 14 சதவீதம் அகவிலைப்படியைத் தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகியது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல், 1.4.2022 முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.
பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து மூன்று மாதங்கள் முன்னதாக, அதாவது 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. இச்சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. அதாவது, 1.7.2021 முதல் 31 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறப்போகிறார்கள். ஆனால், மாநில அரசு ஊழியர்கள் 17 சதவீத அகவிலைப்படியைதான் பெற்று வருகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 சதவீதம். இந்த 14 சதவீதம் அகவிலைப்படியைத் தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தேர்தலுக்கு முன், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு, தேர்தலுக்குப் பின், விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 சதவீத அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

click me!