இந்த பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டும்தான் நியமிக்க முடியும்.. நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்த தமிழக அரசு!

By Asianet TamilFirst Published Oct 22, 2021, 9:00 PM IST
Highlights

இந்து சமய அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்ற விதி உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 

தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்தன. அதில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்து சமயத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சிபிஎம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மற்ற மதத்தினர் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சுஹைல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. எனவே, அந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அறிவிப்பை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில், புதிய அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராயினர். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் வாதாடிய சண்முகசுந்தரம், ‘பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து சமய அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது’ என்று வாதாடினார். 
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி சரவணன் உத்தரவிட்டர். மேலும் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

click me!