விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து.. ஜம்மு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்.. அமித்ஷா அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2021, 5:43 PM IST
Highlights

 ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நம் நாட்டில் ஒரு முக்கிய பகுதியாகும், எனவே உங்கள் அரசியல் அவர்களின் காயங்களை ஒருபோதும் ஆற்றாது என அவர் உருக்கமாக பேசி முடித்தார். 

 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கி அதை எதிர்ப்பவர்கள் அங்குள்ள உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும், அதைவிட்டு பொய்யான தகவல்களை பரப்பி தேசத்தை தவறாக வழிநடத்தக் கூடாது. ஒமுந்தைய காங்கிரஸ் அரசு 4 தலைமுறைகளில் செய்துள்ள பணிகளை நாங்கள் அங்கு வெரும் 17 மாதங்களில் செய்துள்ளோம். ஜம்மு-காஷ்மீரின் வழக்கங்கள் மாறி வருகின்றன. முன்னதாக இங்கு மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சி செய்தனர், ஆனால் இப்போது சாதாரண மக்களும் இங்கு ஆட்சி செய்வார்கள். 

70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ்  எதற்காக இத்தனை ஆண்டுகள்  370 சட்டப்பிரிவை ரத்து செய்யாமல் காலம்  தாழ்த்தியது. எனக்குத்தெரிந்து 1950 லிருந்து காங்கிரஸ் இதை ரத்து செய்வோம் எனக் கூறி வந்தது, ஆனால் நரேந்திர மோடி அரசு வந்த பிறகுதான் இதை நாங்கள் ரத்து செய்தோம், 70 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் கடந்த 17 மாதங்களில் காஷ்மீரில் என்ன செய்தீர்கள் என எங்களிடத்தில் கேள்வி எழுப்புகின்றனர், நான் அவர்களிடம் கேட்கிறேன், கடந்த 70 ஆண்டு காலமாக நீங்கள் அங்கு என்ன செய்தீர்கள், இந்த கேள்வி கேட்பதற்கு முன் அதை கேட்க தகுதி இருக்கிறதா என எண்ணிபார்க்க வேண்டும், ஜம்மு காஷ்மீரை தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்தவர்கள் அங்கு ஒன்றுமே செய்யவில்லை என்றார். 

AIMIM கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி,  ஜம்மு-காஷ்மீரில்  370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அங்குள்ள உயர் பதவிகளில் இந்துக்கள் நியமிக்கப்படுவதாகவும் முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார், அதற்கு பதிலளித்த அமித்ஷா,  ஓவைசியின் மனதில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் இருக்கிறது, அதனால்தான் அவர் ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம் அதிகாரிகள், இந்து அதிகாரிகள் என பேசுகிறார். நான் கேட்கிறேன், ஒரு இந்து அதிகாரி முஸ்லிம் குடிமகனுடன் பேச முடியாதா? ஒரு முஸ்லீம்  அதிகாரி  இந்து குடிமகனுடன் பேச முடியாதா? தயவுசெய்து இந்து-முஸ்லிம் என அதிகாரிகள் இடத்தில் பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள் என்றார்.   

மேலும், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து  கடந்த மாதம் அங்கு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் எந்த இடத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை, இன்று கிராம தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், ஜம்மு காஷ்மீரில் முழு வளர்ச்சியையும்  கருத்தில் கொண்டு 1500 கோடி ரூபாயை நாங்கள் பஞ்சாயத்துக்கு வழங்கியுள்ளோம், சுரங்க உரிமையும் பஞ்சாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது, கடந்த 17 மாதங்களில் சுகாதார துறையில் பல பணிகள் செய்யப்பட்டுள்ளன, நீர்மின் திட்டங்களில் 3490 மெகாவாட்  மின் உற்பத்தி செய்யும் அளவிற்கு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,  3 லட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று குழந்தைகள் கையில் துப்பாக்கி பதிலாக கிரிக்கெட் மட்டை உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்குள் காஷ்மீரை ரயில்வே சேவையுடன் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, 

ஜம்மு-காஷ்மீரில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 2022க்குள் 25  ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும், 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது ஜம்மு காஷ்மீர் மக்களின் நிலத்தை பறிப்பதற்கான திட்டம் என மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் பரப்பப்பட்டது அதை அங்குள்ள மூன்று குடும்பங்கள் செய்து வருகின்றன, யாருடைய நிலமும் பறிக்கப்படப் போவதில்லை என்பதை இந்த நாடாளுமன்றத்தில் கூற விரும்புகிறேன், தொழிற்சாலைகள் தொடங்க போதுமான நிலம் அரசாங்கத்திடம் உள்ளது, இந்த நாட்டின் ஒவ்வொரு முடிவும் இந்த பாராளுமன்ற முடிவு செய்கிறது,  எனவே மக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்திகளையுப் பீதியையும் ஏற்படுத்த வேண்டாம் என்றார். 3 ஆயிரம் காஷ்மீர் பண்டிதர்களுக்கு அரசு வேலை வழங்கி உள்ளது, 2022 ஆம் ஆண்டிற்குள் 6000 காஷ்மீர் பண்டிதர்களுக்கு வீடு கட்டித் தரப்படும், ஆனால் கடந்த 70 ஆண்டுகளால் ஆட்சியில் இருந்தவர்கள் காஷ்மீர் பண்டிதர்களுக்கு என்ன செய்தது.?  சொல்லுங்கள் என்றார். 

மொத்தம்  44 ஆயிரம் காஷ்மீர் பண்டிதர்களுக்கு அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரம் ரூபாய் தருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என எதிர்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் அரசியலை மற்ற பிரச்சினைகளில் செய்து கொள்ளுங்கள், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்றார். உண்மையிலேயே அரசியல் போர் நடத்த வேண்டுமென்றால் களத்திற்கு வாருங்கள், களத்தில் வந்து போட்டி இடுங்கள், அதற்கு யாரும் பயப்பட போவதில்லை, ஆனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நம் நாட்டில் ஒரு முக்கிய பகுதியாகும், எனவே உங்கள் அரசியல் அவர்களின் காயங்களை ஒருபோதும் ஆற்றாது என அவர் உருக்கமாக பேசி முடித்தார். 
 

click me!