தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தலுக்கான அறிவிப்பு விதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்படவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ததோடு புதிய அறிவிப்பாணை வெளியிட்டு 2016 டிசம்பருக்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. உரிய காலத்திற்குள் மீண்டும் தேர்தலை நடத்தக் கோரி திமுகவும் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து 2017ம் ஆண்டு நவம்பர் 17-க்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை. நீதிமன்ற விதித்த கால அவகாசத்திற்குள் தேர்தல் நடத்தப்படாததால் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடையும். பின்னர் வார்டு மறுவரையறை அறிக்கை ஆகஸ்ட் 30ம் தேதி அரசிடம் அளிக்கப்படும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்பதால் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு பிறகே தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யமுடியும் என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இதனால் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.