
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நம்மோட பலத்தை தனித்து நின்று போட்டியிட்டு காண்பிப்போம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறராம் டிடிவி தினகரன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அணிகள் இரண்டாக பிளவுபட்ட நிலையில், அதிமுக அம்மா அணி சார்பில், அதன் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதனை அடுத்து, வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்க உள்ளது.
திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேசை, கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனை நிறுத்துவதா? அல்லது வேட்பாளரை மாற்றுவதா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக அம்மா துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மீண்டும் டிடிவி தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யார்கிட்டேயும் கூட்டணி என்று நாம போக வேண்டாம் என்றும் ஆதரவும் கேட்க வேண்டாம் என்றும் தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், நம்மளோட பலத்தை தனித்து நின்று
போட்டியிட்டு காண்பிப்போம் என்றும், அப்போதுதான் எடப்பாடிக்கு பயத்த கொடுக்கிற மாதிரி இருக்கும் என்றும் தினகரன், தனது நிலைப்பாட்டை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.