
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்ட மருதுகணேஷ் களமிறங்குகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த முறை போட்டியிட்ட மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனை நிறுத்துவதா? அல்லது வேட்பாளரை மாற்றுவதா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இரட்டை இலை சின்னம் பெறுவதில் தோல்வி அடைந்த டிடிவி தினகரன், மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதிமுக அம்மா அணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக அவர் களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் இல்லத்தில் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதிமுக அம்மா அணி சார்பில் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடப் போவதில்லை என்று அதன் துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ள நிலையில், இன்னும் 2 நாட்களில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலின்போது, திமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலின்போது, திமுகவுக்கு ஸ்டாலின் ஆதரவு கேட்டால் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திமுக தலைமைக்கும் போயியுள்ளதாம். இது குறித்து மு.க.ஸ்டாலின்
என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.