ஸ்டாலின் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்.. PTR தலையில் பிரஷர்.. பதவி ராஜினாமாவுக்கு காரணம் இதுதான்? சவுக்கு பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 1:23 PM IST
Highlights

எங்காவது கடன் வாங்கலாம் என்று நினைத்தாலும் வாங்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு ஏற்கனவே கடன் வாங்கப்பட்டு விட்டது, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதே ஒரு சவாலாக உள்ளது. நிதி நெருக்கடி ஒரு பக்கம் இருக்கும் நிலையில்,  திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள் இன்னொரு பக்கம் சவாலாக நிற்கிறது. ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாய்க்கு வந்த வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி வீசி விட்டார், 

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஏகப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு தமிழக நிதி அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும், இதுவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு உள்ள 6 லட்சம் கோடி கடனை எப்படித் தீர்ப்பது என்பதில் மட்டுமே பிடிஆர் என் முழு கவனமும் இருந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் முகத்திலோ, அமைச்சர்கள் முகத்திலோ கொஞ்சம் கூட அதற்கான பூரிப்பு இல்லை. மாநிலத்தின் நிதி நிலைமே அந்த அளவுக்கு என்பதைவிட ஓரளவுக்கு கூட இல்லை என்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதை வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ளத்தின் போது அரசு செயல்பட்ட விதம், மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. ஆனால் இந்த பாராட்டு நிலைக்க வேண்டும் என்றால் மாநிலத்தின் நிதி நிலையை சீரமைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் அரசு இருந்து வருகிறது. கடந்த  ஆட்சியாளர்கள் நிதிநிலையை சீரழித்து விட்டனர், தமிழக அரசின் கருவூலம் காலியாகிவிட்டது என ஆட்சி பொறுப்பேற்ற உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்ததே அதற்கு சாட்சியாக உள்ளது.

அதில் அவர் கடந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்ததுடன் நிலைமை சீரடைய ஒரு சில ஆண்டுகள் எடுக்கும் எனவும் கூறியிருந்தார். இதுவே திமுக தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. எனவே தற்போதுள்ள நிதி நிலைமையை சீர் செய்ய வேண்டிய  பொறுப்பு, நிர்பந்தம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கான பல்வேறு  முயற்சிகளில் அவர் முனைப்பு காட்டி வருகிறார். மாநில அரசுக்கு வருவாயை எந்த வழிகளில் எல்லாம் உருவாக்க முடியும் என்பது குறித்தும்,  அதேநேரத்தில் தற்போதுள்ள கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுதொடர்பாக திமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதேநேரத்தில் பிடிஆர் தியாகராஜனும் இதற்கு இதுவரை மறுப்பு ஏதும் கூறவில்லை. எனவே அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் அதிகமாக பேசி வந்த பிடிஆர் திடீரென சைலண்டு மோடுக்கு போனதற்கும், இப்போது அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கும் காரணம் தலைமைக்கும் அவருக்குமான உறவு சரியில்லை என்பதுதான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து  ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு பிரஷர் அதிகரித்திருப்பது  உண்மைதான் என கூறியுள்ளார். மேலும் அவர் பிடிஆர் குறித்து பேசியிருப்பதாவது:-

பிடிஆர் அவர்கள் திடீரென சைலன்ட் ஆகிவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவர் தொடர்ந்து அரசின் திட்டங்கள் குறித்து ட்விட் செய்து வருகிறார். அரசியல்வாதிகளை பொறுத்தவரையில், எத்தனை பதவிகள் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுக்க மாட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் பிடிஆர் ஒரு பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால், அதற்குப் பின்னால் அழுத்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு திமுகவின் ஐடி விங் ஒரு காரணமாக இருந்தது. அதில் பிடிஆரின் பங்கும் இருந்தது. இந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால், இந்த பதவி வேறு ஒருவருக்கு கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் தலைமைக்கு ஏற்பட்டிருப்பது தான் காரணம். பிடி அரை பொறுத்தவரையில் நான் புரிந்து கொண்ட வகையில், அவரது ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்பதுதான். இதை அவர் ஒரு சவாலாக எடுத்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் 6 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள்.

எங்காவது கடன் வாங்கலாம் என்று நினைத்தாலும் வாங்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு ஏற்கனவே கடன் வாங்கப்பட்டு விட்டது, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதே ஒரு சவாலாக உள்ளது. நிதி நெருக்கடி ஒரு பக்கம் இருக்கும் நிலையில்,  திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள் இன்னொரு பக்கம் சவாலாக நிற்கிறது. ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாய்க்கு வந்த வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி வீசி விட்டார், நகை கடன் தள்ளுபடி, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாய் குறைக்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும், சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும் போன்ற நிறைவேற்ற முடியாத ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டனர். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொங்கலுக்கு 2000 போதாது 5000 கொடுக்க வேண்டும் என பேசினார். டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவோம் என பல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தனர்.

இப்போது அவர்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் பிடிஆரின் தலையில் விழுந்துள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதியை பிடிஆர் உருவாக்கித் தரவேண்டும்  என்ற நிர்பந்தம், அழுத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் பிடிஆர் அவர்களே, கட்சியின் பதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு, மாநிலத்தின் நிதி நிலைமையை கவனிக்க செல்கிறேன் என ஒதுங்கி இருக்க வேண்டும். இது தான் கட்சி பதவி ராஜினாமா முடிவுக்கு காரணமாக இருக்க வேண்டும் என நான் கணிக்கிறேன் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 
 

click me!