கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிபெறாததால் வேலுமணி மீது ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி... வானதி சீனிவாசன் புகார்.!

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2021, 3:25 PM IST
Highlights

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார்.

கோவை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “எஸ்.பி. வேலுமணி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார்” என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் நேற்று காலைமுதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும் சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. இதில் கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையை அரசியல் காழ்புணர்ச்சியால் திமுக பழிவாங்கும் நோக்கத்தில் நடத்துகிறது என அதிமுகவினர் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இது தனிப்பட்ட மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,முன்னாள் அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும் அதேசமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி வேலுமணி மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது.

குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் திரு.எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரச்சாரத்தின்போது பேசி வந்தார்கள்.

அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கூட திராவிட முன்னேற்றக் கழகம் பெற முடியாத நிலை ஏற்பட்டதற்கு எஸ்.பி.வேலுமணி தான் மிக முக்கிய காரணம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.

தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது. இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர் திரு.எஸ்.பி.வேலுமணி என்கின்ற காரணத்தினால் அவரை மனரீதியான உறுதியை குலைப்பதற்காகவும் அவருக்கு தொடர்பு உடைய இருக்கிறவர்களின் இடங்களை எல்லாம் சோதனை செய்வதின் வாயிலாக அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இந்த நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!